ஒரே கல்லில் மூன்று மாங்காய்... அமைச்சர் உதயநிதி மு.கஅழகிரி வீட்டிற்கு விசிட்... பின்னணி இதுதான்..!! - Seithipunal
Seithipunal


திமுகவின் தென் மாவட்ட பொறுப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் மு.க அழகிரி கடந்த 2009ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மத்திய உரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதன் பிறகு ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு 2013ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக படுதோல்வி சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததே என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் அக்கட்சியை சேர்ந்த வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் சமீப காலமாக மதுரை மாவட்ட திமுக செயலாளர்கள் இடையே உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதுரை மாநகர் மேயர் இந்திராணி அமைச்சர் பி.டி.ஆரின் ஆதரவாளர் என்பதால் தனி சுதந்திரத்துடன் மற்ற மாவட்ட செயலாளர்களின் ஆதரவு கவுன்சிலர்களுக்கு இணக்கமாக செயல்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எனினும் உட்கட்சி பூசல் விவகாரத்தில் முடிவு எட்டப்படவில்லை. இந்த உட்கட்சி பூசலை சாதமாக பயன்படுத்திக் கொண்ட சிபிஎம் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது ஆதரவாளருக்கு துணை மேயர் பதவியை வாங்கித் தந்தார். இதனால் மதுரை மாவட்ட திமுகவினர் வெங்கடேசன் மீது அதிருப்தியில் உள்ளனர். 

மேலும் 18 மாத கால திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் தென் மாவட்டங்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் திமுக தலைமை கழகம் அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கச் சென்ற உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க அழகிரி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தென் மாவட்டங்களில் அரசியலை புரட்டி போட்டு உள்ளது. 

தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வரும் மு.க அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மு.க அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதன் மூலம் மதுரை மாவட்ட உட்கட்சி பிரச்சனை, தென் மாவட்டங்களில் திமுகவின் அரசியல் பலம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் என்ற மூன்று மாங்காய்களை ஒரே கல்லில் தட்டி தூக்க திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi went to MK Alagiri house yesterday in Madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->