புதிய நாடாளுமன்றத்தில் ஜூலை 20ல் கூட்டத்தொடர்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு.!!
Union Minister announced Monsoon Session will begin from July20
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி கடந்த மே 28ஆம் தேதி திறந்து வைத்தார். தமிழக மறைகள் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. இதனை கையில் ஏந்தியபடி பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் "2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரின்போது வணிகம் மற்றும் பிற பொருட்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வலியுறுத்துகிறேன்"என பதிவிட்டுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதே போன்று பொது சிவில் சட்டம், டெல்லி அரசுக்கு எதிரான அவசரச் சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் ஜூலை 20ஆம் தேதி தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடர் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
English Summary
Union Minister announced Monsoon Session will begin from July20