ஒடிசா ரயில் விபத்து.. ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் - விசிக திருமாவளவன்.!
VCK thirumavalavan speech about Odisha train accident
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஒடிசா ரயில் விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது இந்த விபத்துக்கு காரணம் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் சரியாக இயங்காதது தான் இது இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரிக்கும் போது தான் தற்போதைய ரயில்வே துறை அமைச்சர் பதவியில் இருந்தால் அந்த விசாரணைக்கு இடையூறாக இருக்கும். எனவே இந்த விபத்திற்கு பொறுப்பேற்ற ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
மத்திய அரசு ரயில்வே துறை, விமானத்துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத் துறைகளை தாரைவார்க்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் தான் சரியான முறையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் பராமரிக்கவில்லை.
இந்த ரயில் விபத்து நடைபெற்ற உடனே தமிழக அரசு 2 அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது. மேலும், தமிழக முதல்வர் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார். தமிழக அரசின் இந்த செயல்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்த வழக்கில் வாதாடி உரிய நீதி பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற ஆவண படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
VCK thirumavalavan speech about Odisha train accident