இந்த ஒரு விஷயத்துக்காகவே திரவுபதி முர்முவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு - மனம் திறந்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!
why pmk support to draupad imurmu
குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர் திருமதி. திரவுபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு அவர்களை நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், “ பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தளம் சமூகநீதி தான். அதனால் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை முதன்முதலாக மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தார்கள்.
திரவுபதி முர்மு அவர்கள் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய வரலாற்றில் இப்போது தான் முதன்முறையாக குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளார். அடுத்து அவர் பெண்மணி. அந்த அடிப்படையில் தான் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் ஆதரவை வழங்கியது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு அவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் என்பதைக் கடந்து பொது வேட்பாளராக அனைவரும் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளித்ததற்காக மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் திரவுபதி முர்மு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவரும், சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான ஜி.கே.மணி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
English Summary
why pmk support to draupad imurmu