தினம் ஒரு திருத்தலம்... பஞ்சாமிர்தம்... தைப்பூசம்... பழனியை சுற்றி பார்க்கலாம் வாங்க.!!
arulmigu dhandayuthapaniswamy temple
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி என்னும் ஊரில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
இந்த கோயில் முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. சிலை உயிர்ப்புள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.
இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இவர் கையில் உள்ள தண்டம் மிகவும் அருள் வாய்ந்தது.
வேறென்ன சிறப்பு :
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
திருவிழாக்கள் :
பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
பிரார்த்தனைகள் :
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக, தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பிரார்த்தனைகள் செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்தும், அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
English Summary
arulmigu dhandayuthapaniswamy temple