உலகைப் படைத்த ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்ட அவதார வரலாறு!
History of Vaikunta Avatar of Sriman Narayana the Creator of the World
அதர்மத்தை அழித்து, தர்மத்தை காக்க யுகாயுகம் தோறும் அவதரிக்கும் ஸ்ரீமன் நாராயணர் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் தீர்த்து சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்தவும், கலியுகத்தை முடித்து தர்மயுகத்தைத் தோற்றுவிக்கவும் கலியுகத்தில் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம் என புனித அகிலத்திரட்டு அம்மானை கூறுகின்றது.
வேதவியாசர் வகுத்த ஆதி ஆகமத்தின் படி இக்கலியுகத்தில் கொல்லம் வருடம் 1008 மாசி மாதம் 20-ஆம் தேதி (C.1833) திருச்செந்தூர் திருப்பாற் கடலுக்குள் ஸ்ரீமன் நாராயணசுவாமிமகரமாய் வளர்ந்து நின்ற அம்மை மஹாலக்ஷ்மியுடன் இணைந்து வைகுண்ட குழந்தையாகி தனக்குத் தாமே மதலையாக வைகுண்டசுவாமியாக அவதரித்தார். பாலன் வைகுண்டரை சரஸ்வதி தேவி தாலாட்ட, அதன் பின் தேவர்கள் பள்ளி உணர்த்த வைகுண்டர் கரையை நோக்கி வந்தார். ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்ட அவதார வரவை எதிர்நோக்கி காத்திருந்த தேவர்கள், வைகுண்டரின் பாதத்தில் விழுந்து வணங்கி, சான்றோர் மக்களை காக்க வேண்டி முறையிட்டனர். அபயமிட்ட தேவர்களுக்கு ஆறுதல் கூறிய வைகுண்டர் தருவைக் கரையில் மக்கள் காணுமாறு பண்டாரமாக மனுச் சொரூபம் எடுத்தார்.
பின் தெச்சணா பூமியில் தாமரையூர் நற்பதியில் வீர நாராயணரும் வைகுண்டமாக ஆறு ஆண்டுகள் சிவபெருமானை நினைத்து தவசு இருந்தார். அப்போது அனைத்து சாதி மக்களையும் ஒரே கிணற்றில் குளிக்க, குடிக்க வைத்து சமத்துவ சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார். மேலும் தன்னை நாடி வந்த மக்களின் சகல விதமான நோய்களையும் தண்ணீர், மண் கொடுத்து தர்மமாக தீர்த்தார். பேய் பிசாசு மாந்திரீகத்தை அழித்தார். உலகைப் படைத்த ஸ்ரீமன் நாராயணனாகிய தாமே வைகுண்டமாக அவதரித்தோமென்றும், பூமியெல்லாம் ஒரு குடைக்குள் கொண்டு வந்து ஆள்வேன் என்றும், ஆகாத தீமை செய்பவர்களை எல்லாம் அழித்து விடுவேன் என்றும் உபதேசித்தார்.
இதனை அறிந்த திருவிதாங்கூர் மன்னன் சாணார் குலத்தில் நாராயணர் அவதரிப்பாரா? என்றெண்ணி உலகளந்த ஆண்டவனை துன்புறுத்தி, தாக்கி, சிறையில் அடைத்தான். விஷம் கொடுத்தும், பட்டினியான புலியின் கூண்டிற்குள் அடைத்தும் அய்யாவை கொல்ல பார்த்த மன்னன் அதில் தோல்வி அடைந்து அய்யாவை விடுதலை செய்தான், இதன் மூலம் பண்டாரக் கோலத்தில் இருந்த நாராயணரிடம் தான் பெற்ற அனைத்து வரங்களையும் இழந்தான். அதன் பின் ஸ்ரீமன் நாராயணர் சப்தகன்னிமார்களான மரகதம் (எ) சாஸ்திரத்தாள், வல்லி, வள்ளி, சலிகை, சரகதக்கன்னி, சரிதை, அரிமடவு என்ற தேவி ஏழு பெண்களையும் முன்னர் கொடுத்த வாக்கின் படியே உலகமறிய திருமணம் செய்து கொண்டார். இலட்சுமி, பகவதி, மண்டைக்காட்டாள், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை மாறி உருவெடுத்து இகனை திருக்கல்யாணம் செய்தார்.
மேலும் பூமடந்தையை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் உலகில் பலவித பெயர்களில் இருக்கின்ற தெய்வங்கள் தாமே என்பதை உலகிற்கு காட்டினார். இவ்வாறாக கலிமுடிக்க தெச்சணத்தில் எழுந்தருளி திருவிளையாடல் புரிந்த ஸ்ரீமன் நாராயணர் தன்னுடைய கலியுக அவதாரத்தை 18 ஆண்டுகள் நிகழ்த்திய பின்பு கொல்லம் வருடம் 1026, வைகாசி மாதம், 21ஆம் தேதி (C.1851) அவதாரத்தை நிறைவு செய்து கலைமுனி மற்றும் ஞானமுனி ஆகியவர்களோடு வைகுண்டம் சென்றார்.
இனி கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவித்து, நல்ல மக்களை வைத்து அரசாள உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணசுவாமி வருகிறார். புனித அகிலத்திரட்டு வேதமானது கடவுள் வைகுண்டரை அய்யா, வைகுண்டசுவாமி, வைகுண்டராசர், சிவ வைகுண்டர், ஸ்ரீ பண்டாரம், ஆண்டவர், கடவுள், கர்த்தன், இறைவன், மாயோன், நாராயணர், விஷ்ணு, திருமால், பெருமாள், அய்யா நாராயணர் என பல நாமங்களில் குறிப்பிடுகின்றது.
English Summary
History of Vaikunta Avatar of Sriman Narayana the Creator of the World