தினம் ஒரு திருத்தலம்.. பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் காளமேகப்பெருமாள்..!!
kalamegaperumal temple
அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம்... இன்று நாம் பார்க்கவிருக்கும் திருத்தலம் அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்.
கோயில் எங்கு உள்ளது :
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் என்னும் ஊரில் அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். எனவே இவர், 'காளமேகப்பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.
பெருமாளானவர் வலது கையை தலைக்கு வைத்து சயனித்திருப்பார். பாதத்திற்கு அருகில் தாயார்கள் இருவரும் கைகளை தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய்யும் கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். இவருக்கு, இத்தலத்தில் 'பிரார்த்தனை சயனப்பெருமாள்" என்று பெயர்.
வேறென்ன சிறப்பு :
இத்தலத்தில் மகாவிஷ்ணுவான காளமேகப்பெருமாள் பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். மார்பில் சாளக்கிராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி காட்சியளிக்கிறார்.
காளமேகப்பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்காக உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
திருவிழாக்கள் :
வைகாசியில் பிரம்ம உற்சவம், ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தைலக்காப்பு, கார்த்திகை தீப விழா போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
பிரார்த்தனைகள் :
இத்தலத்தில் மோட்ச தீப வழிபாடு சிறப்பு பெற்றது.
பித்ருக்களுக்கு திதி, தர்ப்பணம் செய்பவர்கள், செய்ய மறந்தவர்கள் காளமேகப்பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில், நெய் விட்டு தீபமேற்றி வழிபடுகின்றனர். இதை 'மோட்ச தீபம்" என்பர்.
ராகு, கேது தோஷ நிவர்த்திக்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில், ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடலாம்.
என்னென்ன நேர்த்திக்கடன்கள் :
இத்திருத்தலத்தில் வேண்டியது நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.