கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா - நாளை மறுநாள் தொடக்கம்.!
koothandavar temple chithirai festival start
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மே மாதம் 13-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர் அழிகளம் நோக்கி செல்லும்போது திருநங்கைகள் கணவனை நினைத்து ஒப்பாரி வைத்தபடி பின்தொடர்ந்து செல்வார்கள். அழிகளத்திற்கு தேர் சென்றடைந்ததும், அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்தும், குங்குமத்தை அழித்தும் ஒப்பாரி வைப்பார்கள்.
பின்னர், பூசாரி கையால் தாலியை அகற்றிவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். இந்த நிகழ்வைத் தொடர்ந்து 15-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி கொல்கத்தா, மும்பை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
English Summary
koothandavar temple chithirai festival start