நவராத்திரி சிந்தனை || எல்லா வரமும் பெற்ற முனிவரே ஆனாலும் கர்வம் கூடாது!
Navratri Thought Even if you are a blessed sage you should not be arrogant
நவராத்திரி என்றாலே சக்தி வழிபாடு தான். இந்த பிரபஞ்சத்தில் எல்லாவற்றிற்கும் மேலான சக்தியாக விளங்கிடும் அம்பிகையை அலைமகளாகவும்; கலைமகளாகவும்; மலைமகளாகவும் உருவகித்து வழிபடும் பண்டிகை தான் நவராத்திரி. குறிப்பாக, துர்கை எனும் மாபெரும் பெண்சக்தியாக அசுரவதம் செய்திட்ட எல்லாம் வல்ல பரம்பொருளைப் போற்றும் மாபெரும் ஐதீக பண்டிகையாக நவராத்திரி அமைகிறது. அதர்மத்தினை அழித்து தர்மத்தினைக்காத்திட, எல்லா சக்திகளுக்கும் மேலான ஆதிசக்தி அவதாரம் செய்கின்ற மறக்கருணையின் உயர்ந்த தத்துவத்தினை உணர்த்திடுவது அன்னை துர்க்கையின் வடிவம்.
தெய்வ அவதாரங்களிலேயே மிகவும் உக்கிரமானதும், பல தத்துவங்களை உள்ளடக்கியதும், நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துவதானதும் ஆகிய பல சிறப்புகளை உடையது துர்கை வடிவம். துர்க்கமன் என்கிற அசுரனை அழித்ததால் துர்கா எனப்பெறுகிறாள் அன்னை. மஹிஷம் (எருமை) ஆகிய அசுரனை - மஹிஷாசுரனை சம்ஹரித்தமையால்,(மர்த்தனம் என்றால் மாவு போன்று கடைந்து அரைத்தல் என்று பொருள்) மஹிஷாசுரமர்த்தனி என்கிற திருநாமம் ஏற்றவள்.
நவராத்திரி நாயகியாக போற்றப்பெறும் துர்க்காம்பிகையை ஒன்பது நாட்களிலும் நாளுக்கு ஒரு வடிவமாக வழிபடுவதுநம்முடைய மரபு. புண்ணியம் அளித்திடும் நவராத்திரி விரத காலத்தில் அன்னை துர்க்கையின் சிறப்புகளைப் பற்றி பேசுவதும், பகிர்வதும், சிந்திப்பதும் அதீத புண்ணிய பலன்களை அள்ளித் தந்திடும் என்பார்கள். அதனாலேயே நவராத்திரி விரத காலத்தில் அம்பிகையின் சிறப்புகளைப் பேசிடும் தேவீ பாகவதத்தினைப் பாராயணம் செய்வது பரவலான தொன் வழமையாக உள்ளது. சக்தி வழிபாட்டின் சிறப்புகள் நிறைந்த பல அரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற இந்நேரத்தில் அன்னை துர்க்காம்பிகை அவதானிப்பதற்குக் காரணமான புராணக்கதையையும் சற்று சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
புராணகாலத்தில் வரமுனி என்கிற பெரும் தபஸ்வி. ஒரு காலகட்டத்தில் சாதாரணர்களுக்கு வரக்கூடிய கர்வம் என்கிற மாயை மஹாமுனிவராகிய அவரையும் பற்றியதை விதி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த கர்வமானது அவருக்குள்ளே புகுந்து பலமாக ஆட்டி வைத்தது. ஒரு சமயம் அகத்திய மாமுனியானவர், வரமுனியின் ஆசிரமத்திற்கு ஏகிட, இவரோ வந்தவரைக் கவனியாதவர் போல, கால் மேல் கால் போட்டுக்கொண்டு அசையாத எருமை போல படுத்துக் கிடந்தார். நாடி வந்தவர் எவராக இருப்பினும் வாவென உபசரிக்கத் தவறியது குற்றம் தானே?
இதனால் கோபமுற்ற அகத்திய முனிவர் வரமுனி என்று அழைத்தும் சட்டை செய்யாமல் அலட்சியம் செய்த வரமுனியை "மந்த புத்தி காரணமாகச் சூழலில் நடப்பதை உணராத மஹிஷம் (எருமை) போல நடந்து கொண்ட நீவிரும், அதேபோல் ஒரு மஹிஷமாவீர்" என சபித்து விட்டார். சபித்தவரோ ஒரு மஹாமுனி. சாபமேற்ற வரமுனியும் அவருக்குச் சற்றும் இளைத்தவரல்ல. எனவே, அதீத தபோபலத்துடன் கூடிய அந்த ஆத்மாவானது சாதாரணர்களுடையது போல சட்டென எருமையாக மாறவியலாது,
இன்னொரு மஹிஷத்தின் கருவினைத் தேடத் துவங்கியது
இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறத்தில் ரம்பன், கரம்பன் என்கிற பலம் நிறைந்த அசுர சகோதரர்கள் அமிர்தம் பங்கிடலில் அசுரகுலத்தினை ஏமாற்றிய இந்திராதி தேவர்களை அழிப்பதற்காக கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தனர். கரம்பன் நீரிலும்; ரம்பன் அக்னியிலும் நின்றபடி கடுந்தவம் செய்த நிலையில் பிரபஞ்சமே அதிர்வடையத் துவங்கியிருந்தது. தமக்கு ஆபத்து தரவிருக்கும் இத்தகு கடுந்தவத்தினைக் கலைக்க எண்ணிய இந்திரன், யுத்த தர்மத்திற்குப் புறம்பாக முதலையாக மாறி தவத்தில் ஆழ்ந்திருந்த கரம்பனைக் கொன்று விடுகிறார்.
இதையறிந்த ரம்பன் சகோதர பாசத்தினால் அலறியவனாய் உக்கிரகமடைகிறார். ஆத்மஹத்தி செய்துகொள்ளும் பொருட்டு, தன்னை அக்னியிலேயே மாய்த்துக் கொள்ள முயற்சிக்க, பழிக்கு அஞ்சிய அக்னி தேவனோ அவனைத் தடுத்தாட்கொண்டு, 'இந்திரனை வெல்லும்படியாக மகன் வேண்டும்' என்கிற அவனுடைய கோரிக்கையை ஏற்று, வரமளித்துவிட்டு மறைந்து விடுகிறானர்.
அதுவரை கடுமையான தவத்தில் மூழ்கிக் கிடந்த ரம்பனோ தனது தவம் ஏதோ ஒருவழியாக முடிவுற்ற நிலையில், சுயகதிக்குத் திரும்புகிறான். கடும் ஆக்ரோஷத்துடன் அலைந்த அவனை அகோரப்பசி வாட்டுகிறது. அசுரன் நிற்பதோ நடுக் கானகத்தில்!
அச்சமயத்தில் காட்டெருமை ஒன்று வளர்ந்து கிடக்கும் பசும்புற்களை வேகமாக மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த ரம்பன் தானும் எருமை வடிவெடுத்து அப்புற்களை மேய்ந்து பசியாறுகிறான். அசுரகுணம் மேலிட்ட நிலையிலிருந்தவனுக்கு
அருகிலிருந்த பெண் எருமையுடன் ஸ்பரிசம் ஏற்பட்டு விட, அக்கணத்தில் வெளியில் நகர்ந்து கொண்டிருந்த வரமுனியின் உயிர்சக்தி எருமையின் கருவிற்குள் புகுந்து அமர்ந்து விடுகிறது.
அந்நேரத்தில் அப்பெண் எருமையைத் தேடிவந்த ஆண் எருமை ரம்பனைப் பார்த்து கோபம் கொண்டு தாக்குகிறது.என்னதான் எருமை வடிவிலிருந்தாலும் உள்ளிருப்பது அசுரன்தானே. பிறப்பிலேயே காட்டெருமையாக ஜெனித்த மிருகத்தின் வலுத்த தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் கொம்புகளில் கிழிபட்டு மடிந்து வீழ்கிறான் ரம்பாசுரன்.
பெண் எருமையோ அசுரக்கலப்பு ஏற்பட்டுவிட்டதை அறிந்து பதைத்து கதறுகிறது. அஃறிணையாக இருப்பினும், தான் ஏமாறிவிட்டதை ஏற்கவியலாத அவ்வுயிரும் கருப்பிண்டத்தினை வெளித்தள்ளிவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறது. வெளியேறிய பிண்டமோ பாதி மஹிஷமாகவும்; மீதி அசுரனாகவும் கலந்த வினோதமான மிஸ்ர உருவமாக அதீத ஆற்றல் கொண்டதாக இருந்ததுதான் பயங்கரம்.
இப்படி உருவாகும்போதே இரு உயிர்களைக் கொன்றுவிட்டு, வினோத உருவில் வெளிப்பட்ட கருவானது, அதீதமான தவசக்தி மற்றும் அசுரபலத்துடன் வளரத் துவங்கியது. மஹிஷாசுரன் என்ற பெயர் உண்டானதற்குக் காரணம் இதுதான். தன் பிறப்பு குறித்தான எண்ணங்கள் ஏற்படுத்திய ஆத்திரத்தில் புறப்பட்ட மஹிஷன் பிரபஞ்சத்தினையே நடுநடுங்க வைத்திடும் அசுர ராஜனாக விளங்கலானான். கடுந்தவம் ஒன்றினை மேற்கொண்டு பிரமதேவரிடம் தான் பெண்ணால் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என்கிற வரத்தையும் சாமர்த்தியமாக பெற்ற மஹிஷனை எவராலும் அருகில் கூட நெருங்க இயலவில்லை. தனது அசாத்திய வலிமையால் மூவுலகிலும் தனது ஆட்சியை நிறுவுகிறான்.
இந்திரலோகத்து அரியணையில் அவன் அமர, ஐராவதம் எங்கேயோ ஓட்டம் பிடிக்க, இந்திரன் பயந்து தலைமறைவாகிட, சகல தேவராதிகளும் தப்பித்தால் போதும் என அஞ்ஞாத வாசம் செய்யலானார்கள். முனிவராதிகள் செயலிழந்து நிற்க, யாகங்களும், வேள்விகளும் செய்வாரின்றி, அவிர்பாகத்தால் பெறுகிற பலத்தினைக்கூட அடைய இயலாமல் தேவருலகினர் உழன்ற நிலையில், பலர் அசுர வேடம் தாங்கி பயத்துடன் வாழத் துவங்கினார்கள்.
இந்நிலையில் வைகுந்தத்திற்கு ஏகிய பிரமதேவரோ நாரணனைத் துதித்து நிற்கிறார். நெடிய அறிதுயிலில் இருந்த நாரணன் திருக்கண்மலர, அவரது கரத்திலிருந்த சக்கரப்படை சீற்றத்துடன் சுழன்று கிளம்புகிறது. பெண்ணொருத்தியால் மட்டுமே அழிவு நேரிடும் என்ற மகிஷனின் கணக்கினை அவர் அறியாதவரா என்ன.? மஹிஷனின் அழிவினை நோக்கி அவனை வெளிக்கொணரத் தேவையானதொரு சீண்டலை திருமாலன்றி யாரால் நிகழ்த்திட இயலும்? திருமாலின் சக்கரப்படை மிகுந்த வலிமையுடன் சென்று, மஹிஷனின் காவலாக இருந்த அவனது வரசித்திகளை அழித்துப் பொடிப்பொடியாக்கி விட்டுத் திரும்பிட, மிகுந்த கோபாவேசத்துடன் மஹிஷன் போருக்குக் கிளம்பி விட்டான். திருமகள் உள்ளிட்ட சகலரும் பதட்டத்துடன் நோக்கிட, மஹிஷனை அழிக்கவல்ல ஆதிபராசக்தியின் அவதார நிகழ்விற்கு சுழிபோட்டுத் துவக்கி விட்ட நிறைவில் விஜயத்துடன் வந்த சக்கரப்படையைக் கைக்கொள்கிறார் திருமால்.
English Summary
Navratri Thought Even if you are a blessed sage you should not be arrogant