ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் கோவிலின் நடை திறப்பில் மாற்றம்.!
rameshwaram temple gate closing time change for aadi amavasai
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 7-ம் நாளான இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்.
இரவு எட்டு மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளது. கோவிலின் நடை இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பகல் முழுவதும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு இருக்கும். இரவு 9 மணிக்கு பிறகுதான் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விழாவின் 8-ம் திருநாளான நாளை மாலை 4 மணிக்கு மேல் கோவிலில் இருந்து அம்பாள், தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடி மேலத்தெரு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் நாளை மாலை 4 மணியில் இருந்து இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தமாடவும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி அன்று மஞ்சல் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுவதால் அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை கோவில் நடை சாத்தப்படும். ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்று 6:00 மணிக்கு கெந்தமாதன பர்வதம் செல்லும்போது நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
rameshwaram temple gate closing time change for aadi amavasai