தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள்.. திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
Rooms can be booked only if there is a darshan ticket. New restrictions for Tirupati devotees
திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என திருப்பதிதேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் மொத்தம் 7,500 தங்கும் அறைகள் உள்ளன. இதில் உள்ள 3,500 அறைகள் சி.ஆர்.இ. அலுவலகத்தில் இருந்து நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் வழங்கப்படுகிறது.மேலும் 1,580 அறைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு முன்பதிவு செய்வதற்கும், 400 அறைகள் நன்கொடையாளர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் 450 அறைகள் வருகைப் பதிவுக்கு உட்பட்டவையாக வழங்கப்படுகின்றன. இதையடுத்து மீதமுள்ள அறைகள் நேரடியாக வரும் விஐபிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த தங்கும் அறைகளை பத்மாவதி விசாரணை மையம், எம்பிசி மற்றும் டி.பி.சி. கவுன்டரில் இருந்து பெற வேண்டும். ஆனால் கடந்த காலங்களில், ஆதாரை பயன்படுத்தி புரோக்கர்கள் விஐபி அறைகளை அதிகளவில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். மேலும் இந்த அறைகளை 48 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பதால், ஒரு பக்தர் தரிசனத்தை முடித்துவிட்டு அறையை காலி செய்தவுடன் அதே அறையை அடுத்தடுத்து 2 அல்லது 3 பக்தர்களுக்கு கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சாமி தரிசனம் செய்யாமல் சுற்றுலா வந்து தங்கிவிட்டு செல்வதற்கும் இந்த அறைகளை பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது . இந்தநிலையில் இதை தடுக்க தேவஸ்தானம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அறைகள் பெறுவதற்கு ஆதார் அட்டையுடன், தரிசன டிக்கெட்டுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் இதன்காரணமாக தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் உடனடியாக அறைகளை காலி செய்வார்கள் என கூறியுள்ளது. இதையடுத்து மற்றொரு அரை மணி நேரத்திற்குள் மற்ற பக்தர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் இதனால் தேவஸ்தானத்திற்கு வருமானமும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rooms can be booked only if there is a darshan ticket. New restrictions for Tirupati devotees