நாளை மண்டலபூஜை.. ஐயப்பன் கோவிலில் குவியும் பக்தர்கள்.!!
sabarimala iyyappan temple mandala pooja
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதுஒரு நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் மண்டல பூஜை நாளை நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி கடந்த 22ஆம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது. தங்க அங்கி இன்று மதியம் பம்பா கணபதி கோவில் வந்தடையும், பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்கி அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.
அதையடுத்து பதினெட்டாம்படி கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் உடன் தங்கி ஒப்படைக்கப்படும். இதையடுத்து, பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
மீண்டும் நாளை அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். இதைத்தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மகர விளக்கையொட்டி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
English Summary
sabarimala iyyappan temple mandala pooja