வலதுபுறம் வளைந்திருக்கும் தும்பிக்கை..நெற்றிக்கண் விநாயகர்..அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்.!
Today special Mumbai Sidhi vinayagar special
இந்த கோயில் எங்கு உள்ளது?
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாவட்டத்தில் உள்ள பிரபாதேவி என்னும் ஊரில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மும்பையிலிருந்து தாராவி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருவறையில் விதவிதமான ஆபரணங்கள் அணிந்து, வேலைப்பாடு மிகுந்த ஒரு வெள்ளி மேடையில் அமர்ந்து அழகே உருவாகக் காட்சி தருகிறார் சித்தி விநாயகர்.
எல்லா விநாயகர் விக்ரகத்திலும் தும்பிக்கை இடது புறமாக வளைந்திருக்கும், சித்தி விநாயகரின் விக்ரகத்தில் தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது.
விசித்திரமாக இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன ரித்தி மற்றும் சித்தி என்ற இரண்டு பெண் தெய்வங்களின் விக்ரகங்கள் காணப்படுகிறது.
அருகில் உள்ள பளிங்கு மேடை ஒன்றின் மீது, சுமார் ஒன்றரை அடி உயர வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டுக் காட்சியளிக்கிறது மூஞ்சூறு.
தங்கமுலாம் பூசப்பெற்ற இந்த மேடையின் விதானம், ஒரு தாமரைப்பூவைக் கவிழ்த்து வைத்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளது.
வேறென்ன சிறப்பு?
ஐந்து அடுக்குக் கட்டிடமாக உள்ள இந்தக் கோயிலின் கருவறை விமானத்தின் மேல் தங்கமுலாம் பூசப்பட்ட பெரியகலசம் ஒன்று (சுமார் 12 அடி உயரம்) காணப்படுகிறது.
இங்குள்ள விநாயகரின் விக்ரகம் ஒற்றைக் கருங்கல்லால் ஆனது. உயரம் சுமார் இரண்டரை அடி, அகலம் இரண்டு அடி. நவீன பாணியிலான மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் நைவேத்தியம், ஒரு பிரத்தியேக லிப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அர்ச்சகரால் விநாயகருக்குப் படைக்கப்படுகிறது.
இங்கு ஆஞ்சநேயருக்கும் தனிச் சன்னதி உள்ளது. காவி நிறத்தில் காணப்படும் அழகிய மண்டபத்தில், கல்லாலான புடைப்புச் சிற்பத்தில் வாலை உயர்த்தியபடி தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.
இங்கு கண்ணாடிப் பெட்டி ஒன்றுக்குள் சந்தனமரத்தில் வடிவமைக்கப்பட்ட தேர் இடம் பெற்றுள்ளது.
கோபுரத்தின் பழைய கலசம் ஒன்றையும் கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சங்கடஹர சதுர்த்தி பூஜை, பஞ்சாமிர்த பூஜை, ஸ்ரீசத்யநாராயண பூஜை, லகு ருத்ர பூஜை முதலான இன்னும் பல பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
குழந்தை வரம் வேண்டுவோர் இத்திருக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
விநாயகருக்கு சனிக்கிழமைதோறும் எண்ணெய் வழிபாட்டுடன் எருக்கம் இலை மாலையை அணிவித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
English Summary
Today special Mumbai Sidhi vinayagar special