நாளை வைகுண்ட ஏகாதசி.. விரதம் இருந்து வழிபடுவது எப்படி? வைகுண்ட ஏகாதசி...!! - Seithipunal
Seithipunal


மார்கழி மாதம் என்றாலே விழாக்களின் மாதம் எனலாம். மாதங்களில் மிக புனிதமானதாக ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் பார்க்கப்படுகின்றன. அதனால் இந்த மாதங்களில் திருமணம் உள்ளிட்ட பெரிய சுப நிகழ்வுகள் வைக்காமல் இறைவனை ஆராதிப்பதற்கான மாதமாக போற்றப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என ஜகத்குருவாம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கூறினார். எம்பெருமான் மகா விஷ்ணு இருக்கக்கூடிய இடம் வைகுண்டம் என்பார்கள்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், 'வைகுண்ட ஏகாதசி" மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி (வியாழக்கிழமை) நாளை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படவுள்ளது. அதே போன்று 'வைகுண்ட ஏகாதசி" தொடங்கி அடுத்து வரும் பத்து நாட்கள் இராப்பத்து என்ற நிகழ்வு நடக்கும். இந்த நாட்களில் இரவில் எம்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளுவார்.

இராப்பத்து முழுவதும் 10 நாட்கள் பெருமாள் கோவிலில் உள்ள வைகுண்ட வாசல் திறந்திருக்கும். வைகுண்ட வாசல் வழியாக சென்று நாராயணனை தரிசனம் செய்தால், நமக்கு முக்தியும், வைகுண்டத்தில் எம்பெருமானின் சேவையை செய்யும் பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாளை சொர்க்கவாசல் திறப்பு..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமான ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு விட்டது. எனவே ஸ்ரீரங்கம் தவிர அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் (நாளை) வியாழக்கிழமையன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். பெருமாள் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி நாளை கொண்டாடப்படுகிறது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சரியாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

சொர்க்கவாசல் சிறப்பு :

திருமால் ஆலயங்களில், உட்பிரகாரத்தில் இருந்து வெளிப்பிரகாரத்திற்கு திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருளுவார். இந்த திருக்காட்சியை காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருந்து பெருமாளை சேவிப்பார்கள்.

வைகுண்ட ஏகாதசி விரதம் :

வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து முன்னிரவு முதல் உறங்காமல், திருமாலின் பக்தி பாடலை பாடுவதும், புராண கதைகளைப் படிப்பதும், பஜனை பாடுதல், மகா விஷ்ணுவிற்கு உகந்த மந்திரங்களை உச்சரிப்பது, சொற்பொழிவு கேட்டல் ஆகிய பக்தி பரவசமூட்டும் செயல்களை செய்யலாம்.

இந்த அற்புத தினத்தில் விடியற்காலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, கோவிலுக்கு வடகிழக்கு பகுதியில் உள்ள சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டு வருவது வழக்கம்.

சிறப்பு :

வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் நீங்குவார்கள். மேலும், முக்திக்கான வழியை அடைவீர்கள். ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaikunda Ekathasi special


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->