ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. இலங்கை - ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை.!
Asia Cup cricket tournament today starts
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
15-வது ஆசியக் கோப்பை இலங்கையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், அங்கு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 7 முறை கோப்பையை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறுகிறது.
துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Asia Cup cricket tournament today starts