ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடும்படி புஜாரா, ரஹானேவுக்கு கங்குலி அறிவுரை.!
Ganguly advised to Rahane and Pujara
அஜிங்கியா ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விளையாடும்படி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்களான ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் சமீபகாலங்களில் டெஸ்ட் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமலும், ரன் குவிக்கவும் தடுமாறி வருகிறார்கள்.
இதனால் அவர்களை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு புதிய இளம் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி, ரஹானே மற்றும் புஜாரா இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர்கள் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் ரன் குவிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் அதிகமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், மறுபடியும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைப்பதாகவும், ரஞ்சி கிரிக்கெட் என்பது மிகப்பெரிய கிரிக்கெட் தொடர், அதில் நாங்கள் அனைவரும் விளையாடி இருக்கிறோம் என்றும் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடாமல், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டுமே இடம் பெறுவதால் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடுவதில் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இருக்காது என்றும், அப்படி அவர்கள் ரஞ்சி போட்டியில் விளையாடினால் மீண்டும் பழைய நிலைக்கு வர அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Ganguly advised to Rahane and Pujara