ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய நம்பர் 01 டென்னிஸ் வீரருக்கு தடை விதிப்பு..!
No 01 tennis player banned for doping test
இத்தாலி டென்னிஸ் வீரரான 23 வயதான ஜானிக் சின்னர் சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். உலகின் 'நம்பர்-1' வீரரான இவரிடம், கடந்த 2024, மார்ச் மாதம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
இதன் போது இவர் உடலில் தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னர் கூறுகையில், ''விரலில் ஏற்பட்ட காயத்திற்கு, பிசியோதெரபிஸ்ட், வலி நிவாரணி மருந்தை 'ஸ்பிரே' செய்தார். அடுத்து டிரெய்னர் மாசாஜ் செய்ய போது, தவறுதலாக 'குளோஸ்டெபால்' மருந்து உடலில் கலந்து விட்டது,'' என்று கூறியுள்ளார்.

இதை ஏற்றுக் கொண்ட சர்வதேச டென்னிஸ் ஏஜென்சி, சின்னரை, 'சஸ்பெண்ட்' செய்யாமல், இருந்தது. இருப்பினும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,), 'சின்னருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்க வேண்டும்,' என, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (லாசேன், சுவிட்சர்லாந்து) முறையிட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து சின்னர் கூறுகையில்,''எனது அணியினர் செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மூன்று மாத தடையை (பிப்ரவரி . 09 முதல் மே 04 வரை) ஏற்றுக் கொண்டால் வழக்கு முடிவுக்கு வரும் என டபிள்யு.ஏ.டி.ஏ., தெரிவித்ததை ஏற்றுக் கொள்கிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தனது அப்பீலை டபிள்யு.ஏ.டி.ஏ., திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. அடுத்து மே 07-இல் தொடங்கும் இத்தாலியின் ரோம் தொடரில் சின்னர் மீண்டும் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
No 01 tennis player banned for doping test