ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 10-ஆம் தேதி தொடக்கம்.!
Ranji Trophy 2022
இந்த ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 10-ஆம் தேதி தொடங்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிதிக்கெட் போட்டிகள் வரும் 10-ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்களும், மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நாக்அவுட் சுற்று ஆட்டங்களும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. "எலைட்" பிரிவில் இடம்பெறும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணிகளும் அதன் பிரிவில் இருக்கும் அணிகளுடன் தலா ஒது முறை மோதும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு அணியும் தலா மூன்று ஆட்டங்களில் விளையாடும்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில், தமிழக அணி H பிரிவில் இடம் பிடித்துள்ளது. டெல்லி, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அணிகளும் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த பிரிவு ஆட்டங்கள் கவுகாத்தியில் நடைபெறவுள்ளன.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த ஆண்டு தான் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் ஒருநாள் தொடர் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.