இனி யாருக்கும் வாய்ப்பே இல்லை, சச்சினின் 25 வருட சாதனை! ஷுப்மன் கில்லுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு!
Shubman Gill get chance to break the sachin tendulkar 25 year unbreakable record
ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையானது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் வசம் இருக்கிறது. எத்தனையோ ஜாம்பவான் வீரர்களே வந்தாலும், முறியடிக்க முடியாத சாதனையாகவே 25 வருடங்களாக தொடர்கிறது.
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 1998 ஆம் ஆண்டு என்பது மறக்கவே முடியாத ஆண்டாக பதிவானது. அந்த வருடம் தான் சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஒரே வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை புரிந்தார். அவர் 34 ஆட்டங்கள் விளையாடியதில், 33 இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார். 9 சதங்கள், 7 அரை சதங்களுடன் 1894 ரன்களை குவித்து இருக்கிறார்.
இந்த சாதனை தான் 25 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இந்த அரிய சாதனையை முறியடிக்க தற்போதைய இந்திய வீரர் ஷுப்மன் கில்லுக்கு அரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் 20 ஆட்டங்களை ஆடியுள்ள ஷுப்மன் கில் இதுவரை 5 சதங்கள் 5 அரைசதங்களுடன் 1230 ரன்களை குவித்து இருக்கிறார்.
சச்சினின் சாதனையை தகர்க்க கில்லுக்கு இன்னும் 665 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ஆட இருப்பதால், கில்லுக்கு காயங்கள் ஏதும் ஏற்படாத பட்சத்தில், நிச்சயமாக அவர் 9 லீக் ஆட்டங்களை ஆட வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணி அரையிறுதி, இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றால், கூடுதலாக அவருக்கு இரண்டு போட்டிகள் கிடைக்கும்.
உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன், தென்னாப்பிரிக்க அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவிற்கு இருக்கிறது. ஆக கில்லுக்கு இன்னும் குறைந்தபட்சம் 12 ஆட்டங்களும் அதிகபட்சம் 14 ஆட்டங்களும் இந்த ஆண்டில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதே பார்மில் அவர் தொடர்ந்து விளையாடினால், உலக்கோப்பை தொடரிலே இந்த சாதனையை தகர்க்கும் வாய்ப்பு அமையலாம்.
உலகக்கோப்பை தொடரிலே இந்த சாதனையை அவர் முறியடிப்பார் என்றால், சச்சின் வசம் 20 வருடங்களாக இருக்கும் மற்றொரு சாதனையையும் அவர் முறியடித்திருப்பார். ஆம் 2003 ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் அடித்த 673 ரன்களே ஒரு உலகக்கோப்பை தொடரில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்னாக பதிவாகியிருக்கிறது. 665 ரன்களை கில் அடிக்கும் போது, மேற்கொண்டு கூடுதலாக 8 ரன்கள் அடித்தால், சச்சினின் சாதனைகளை முறையடித்து ஷுப்மன் கில் புதிய வரலாற்றை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எழுதுவார்.
இந்த சாதனையை இதற்கு மேல் முறியடிக்க வாய்ப்புகள் கிடைப்பது அனைவருக்குமே அரிதான விஷயம் தான். T20 போட்டிகளின் வரவினாலும், உலகம் முழுக்க T20 லீக் போட்டிகள் நடத்தப்படுவதாலும் பெரும்பாலான அணிகள், இருதரப்பு, முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர்களை விளையாடுவதை நிறுத்திவிட்டனர்.
இந்திய அணியே கடந்த 2007 - 2011 உலககோப்பைகளுக்கு இடையே 117 ஒருநாள் போட்டிகளையும், 2011 - 2015 உலககோப்பைகளுக்கு இடையே 99 ஒருநாள் போட்டிகளையும், 2015 - 2019 உலககோப்பைகளுக்கு இடையே 86 ஒருநாள் போட்டிகளையும், 2019 - 2023 உலககோப்பைகளுக்கு இடையே 66 ஒருநாள் போட்டிகளையும் மட்டுமே ஆடியிருக்கிறார்கள். இப்படி படிப்படியாக ஆட்டங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.
கடைசி நான்கு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 17 ஆட்டங்கள் மட்டுமே ஆடப்பட்டுள்ளது. எனவே இனி ஒரு வீரருக்கு சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பது என்பது அரிதான விஷயமாகத் தான் இருக்கும். மேலும் ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே நடக்காமல் கூட போகலாம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
ஷுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 25 வருட வரலாற்றை மாற்றி எழுதுவாரா என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சச்சினின் சாதனைகளை முறியடிக்கவும், அதன் வழியாகவே உலகக்கோப்பையை வென்று வரவும் ஷுப்மன் கில்லை வாழ்த்திவிட்டு செல்வோம்!
English Summary
Shubman Gill get chance to break the sachin tendulkar 25 year unbreakable record