வண்ணமயமாக நிறைவு பெற்ற குளிர்கால ஒலிம்பிக்! பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடம்.!
Winter Olympic Norway first in Medal Tally
சீனாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 16 தங்கம் உட்பட 37 பதக்கங்களுடன் நார்வே முதலிடம் பிடித்தது.
24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங் நகரில், கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 91 நாடுகளை சேர்ந்த 2871 வீரர் வீராங்கனைகள், 15 வகையான போட்டிகளில் இருந்து 109 பிரிவுகளில் பங்கேற்று விளையாடினர்.
இந்த தொடரின் கடைசி நாளான நேற்று, ஆண்களுக்கான ஐஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணியை பின்லாந்து அணி எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணி தங்கம் வென்றது.
நேற்றுடன் மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில் 29 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன.
நார்வே முதலிடம்:
16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களை நார்வே அள்ளியது.
12 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் ஜெர்மனி இரண்டாவது இடம் பிடித்தது.
போட்டியை நடத்திய சீனா, 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்தது.
8 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 25 பதக்கங்களை வென்ற அமெரிக்காவிற்கு 4 -வது இடம் கிடைத்தது.
இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீரரான ஆரிப் கான் எந்த பதக்கமும் வெல்லவில்லை.
பெய்ஜிங் நகரில் மிகவும் கோலாகலத்துடன், வண்ணமயமாக நிறைவு விழா நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர், தாமஸ் பக் "இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்துடன் நிறைவு பெற்றன" அறிவித்தார்.
அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2026-ஆம் ஆண்டு இத்தாலியில், மிலன் மற்றும் கோர்டினோ டி அம்பசோ நகரங்களில் நடைபெற இருக்கிறது.
இந்தியா புறக்கணிப்பு:
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன இராணுவத்திற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற சண்டையில் பங்கேற்ற சீன ராணுவ வீரர் ஒருவர், குளிர்கால ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் கலந்து கொண்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தியா, தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Winter Olympic Norway first in Medal Tally