டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்.. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.?
World test championship final IND vs AUS today
டி20 மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.
இதில், முதலாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று மதியம் 3 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, அஜின்க்யா ரகானே நல்ல பார்மில் உள்ளனர். மேலும், பந்துவீச்சில் சிராஜ் மற்றும் ஷமி சிறப்பான ஃபார்மில் உள்ளதால் இந்திய அணி வலுவாக உள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி செய்து வருகிறது. எனவே சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியின் போது இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் லேசான காயம் எனவும் இன்று அவர் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நேருக்கு நேர்
இந்தியா ஆஸ்திரேலியா இரு அணிகளும் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. 32 போட்டிகளில் இந்திய அணியும், 44 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 29 போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டியில் முடிவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல்
இந்திய அணி வீரர்கள்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷன் உனத்கட், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்
பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் (துகே) , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்
பரிசுத்தொகை
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் அணிக்கு 13.2 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு 6.5 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
World test championship final IND vs AUS today