தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 200 பூங்காக்கள்.. மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் தகவல்!
200 parks in Thoothukudi Corporation area Mayor Jagan at Peoples Grievance Redressal Camp
பொதுப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவரும் வகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது என தூத்துக்குடி,வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் தெரிவித்தார்,
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா, முன்னிலை வகித்தனர். வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.
முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்;தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் மண்டல வாரியாக நடைபெறுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பெறப்படும் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
மண்டல அலுவலகங்களில் பத்து மாதங்களாக நடைபெற்று வரும் குறைதீர்க்கும் முகாம்களில் ஆரம்பத்தில் 125 கோரிக்கை மனுக்கள் வந்தநிலையில் இப்போது 50 மனுக்களாக குறைந்துள்ளது. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதால் மனு வருவது குறைந்து வருவதாக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மாநகராட்சி பகுதியில் 200 பூங்காக்கள் அமையவுள்ளது காலச் சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்புது திட்டங்களை தயாரித்து வருகிறோம். இடவசதி உள்ள இடங்களில் கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு திடல்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். எஸ்கேஎஸ்ஆர் காலனி சிறுவர் விளையாட்டு மைதானத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
எட்டையாபுரம் சாலையில் நடைபயிற்சி வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. தனசேகர் நகர் குறிஞ்சி நகர் பகுதியில் கூடுதலாக மாநகராட்சி சாா்பில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. கோடையிலும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் உள்ளது அதே போல் குடிதண்ணீரும் சீராக அனைத்து பகுதிகளிலும் வழங்கி வருகிறோம். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது போல், படிப்பு திறனையும், புத்தகப் பிரியர்களையும் மட்டுமன்றி, ஆராய்ச்சி மாணவர்கள், பொதுப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவரும் வகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது.
தென் மாவட்டங்களின் முதல் ஸ்டெம்பார்க் அறிவியல் பூங்கா தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு மாணவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் மழை நீர் சுத்திகரிப்பு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. மேலும் லூர்தம்மாள் புரத்தில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரித்து உணவு இங்கிருந்து பள்ளிகளுக்கு செல்கிறது. முதலமைச்சர் அறிவிப்பின் படி கோடைகாலத்தில் பறவைகளுக்கு மாநகராட்சி சார்பில் தண்ணீர் வைக்கப்படுகிறது. பேருந்து நிலையம் உட்பட 12 இடங்களில் கோடை காலத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் பயணிகள், பொதுமக்களுக்கு உப்புகரைசல் நீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாநகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் வருகிறது. விரைவில் மாநகரின் மையப் பகுதியில் மையவாடியில் நாய்களுக்கான சிறப்பு இடம் ஒதுக்கப்படவுள்ளது.
வஉசி மார்க்கெட் புதியதாக கட்டப்பட உள்ளது. தற்போது உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள காலி மைதானத்தில் விளையாட்டு மைதானம், காலரி வசதியுடன் அமைக்கப்பட உள்ளது தற்போது மைதானத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு வருகிறது. காலி மனைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக அப்புறப்படுத்த சம்பந்தபட்டவா்களுக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. குறிப்பாக மேற்கு மண்டலம் 16, 17, 18 வடக்கு மண்டலம் 2, 3 உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்த நிலையை மாற்றியுள்ளோம். அனைத்து தரப்பினர் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சிறப்பாக செயல்படுவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், முனீர்அகம்மது, நகர்நல அலுவலர் அர்விந் ஜோதி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வாி, சுப்புலட்சுமி, காந்திமதி, பவாணி, ஜெயசீலி, கற்பககனி, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், உதவியாளர் ஜோஸ்பர், மாவட்ட ஓபிஎஸ் அணி தலைவர் பழனிச்சாமி பாண்டியன், காங்கிரஸ் பிரமுகர் குமாரமுருகேசன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத் தலைவர் சேகா், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
200 parks in Thoothukudi Corporation area Mayor Jagan at Peoples Grievance Redressal Camp