2021ஆம் ஆண்டில்.. நீங்கள் மிஸ் செய்த திருவிழாக்கள் எது?
2021 missed festivals
2021... ஆன்மிகம் ஒரு பார்வை...!!
நாம் அதிகமாக செல்லும் இடம் என்றால் அது வழிபாட்டு தலம்தான். அருகில் உள்ள தலமோ... அல்லது அதிக தொலைவில் உள்ள தலமோ... எதுவாக இருந்தாலும் உடனே சென்று விடுவோம்.
மன நிம்மதி வேண்டி அனைவரும் செல்லக்கூடிய இடம் என்றால் அது வழிபாட்டு தலம்தான். ஆனால் இந்த வருடத்தில் நாம் அதிகம் செல்லாத இடம் என்று கேட்டால் அதுவும் வழிபாட்டு தலம்தான்.
பண்டிகை காலங்கள், மாத தொடக்கம், வருட தொடக்கம், அமாவாசை, பௌர்ணமி இன்னும் எத்தனையோ நாட்கள்...
புத்தாண்டு கொண்டாட்டத்தில் முதல் இடம் பிடிப்பது அனைத்து வழிபாட்டு தலங்களிலும் செய்யப்படும் இறைவழிபாடுதான்... ஆனால் கடந்த வருடத்தில் வழிபாட்டு தலங்களுக்கு செல்லாமல் எளிமையான முறையில் அனைவரும் வீட்டில் இருந்தவாறே வழிபாடு செய்தோம்.
அதேபோல் பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் விமர்சையாக கொண்டாடுவோம்... காணும் பொங்கல் அன்று உறவினர்களை காண பொது இடங்களிலோ அல்லது அவர்களின் வீடுகளுக்கு சென்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவோம். ஆனால் கடந்த வருடம் பொங்கல் திருவிழா வெறும் விடுமுறை நாட்களோடு முடிந்துவிட்டது. பொது இடங்களில் கூடுவதோ... வெளியில் செல்வதோ என எந்தவிதமான கொண்டாட்டங்களும் இல்லை.
தைப்பூச திருநாளில் பாத யாத்திரையாக முருகன் தலங்களுக்கு சென்று வழிபடுவது, அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயர் தலங்களுக்கு செல்வது, மகா சிவராத்திரியன்று இரவு முழுவதும் சிவ ஆலயத்தில் இருந்து சிவனை மனதார வழிபடுவது,
தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி கிரிவலம், கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் போது தண்ணீரை பாய்ச்சியடிக்கும் வைபவம், மீனாட்சி திருக்கல்யாணம், ஸ்ரீ ராம நவமியன்று ராமரின் திருக்கோலத்தை காணுதல், வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானின் அழகு முகத்தை காணுதல்,
ஆடி பிறப்பன்று அனைவரும் ஒன்றுகூடி தேங்காய் சுடுதல், ஆடி மாதம் தொடக்கம் முதல் இறுதிவரை அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் திருவிழா, ஆடி வெள்ளிக்கிழமைகள்... ஆடிப்பெருக்கு அன்று நீர் கரையோரங்களுக்கு சென்று தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு, திருவாடிப்பூரத்தன்று அம்மனுக்கு செய்யும் வளையல் காப்பு அலங்காரம்,
வரலட்சுமி விரதம் என எத்தனை எத்தனையோ விசேஷ நாட்களில் நாம் ஆலயத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். இந்த வருடம் தொடக்கம் முதல் ஆண்டின் பாதி நாட்கள் வெளியே செல்லாமல் மிகுந்த பாதுகாப்புடன் தான் இருந்தோம்...!
கடந்து வந்த 2021ஆம் ஆண்டில் நாம் மிஸ் செய்த ஆன்மிக திருவிழாக்களை வரவிருக்கும் 2022ஆம் ஆண்டில் எதிர்நோக்கி வரவேற்க தயாராவோம்.