விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது,

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் படுதோல்வி அடைந்து விட்டது. உழவர்களுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த மின்வாரியம் மறுப்பது ஆணையத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப் படுவதில்லை என்பதால் உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், இப்போது வரை உழவர்களுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி, மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் தவிர மீதமுள்ள நேரங்களில் சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தவிர மீதமுள்ள  18 மணி நேரத்திற்கு மும்முனை மின்சாரம் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது என்பதிலிருந்தே எந்த ஒரு பகுதிக்கும் 6 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்பது உறுதியாகிறது.

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவது சாத்தியமானது தான். அதற்காக  300 மெகாவாட் முதல் 500 மெகாவாட் மின்சாரம் மட்டும் தான் கூடுதலாக செலவாகும். அதுமட்டுமின்றி, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதன் மூலம் உழவர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொள்வார்கள். அதனால், உச்சப்பட்ச மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் நீர் இறைப்பான்களை பயன்படுத்துவது குறையும். இதன்மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தடையற்ற மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க முடியும் என்பது தான் எதார்த்தமான உண்மை.



அனைத்துத் தொழில்துறையினருக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டியது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடமை ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சேவியர் என்பவர் தொடர்ந்து அவருக்காக நீலகண்டப் பிள்ளை என்ற மின்சார வாரியத்தின் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் வாதிட்ட வழக்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2023&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29&ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில் இதை உறுதி செய்திருக்கிறது.

‘‘உழவர்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்குவது சாத்தியமானது தான். உழவர்களின் ஒத்துழைப்புடன் இதை சாத்தியமாக்க முடியும் என்பதை தில்லியில் செயல்பட்டு வரும் மின்சார வினியோக அமைப்புகள் உறுதி செய்திருக்கின்றன. மின்சாரப் பற்றாக்குறையை போக்குவதற்கு மும்முனை மின்சாரத்திற்கு மாற்றாக இருமுறை மின்சாரம் வழங்குவது தான் தீர்வு என்று மின்வாரியம் நினைப்பது தவறு. இந்த அணுகுமுறையை விடுத்து 24 மணி நேரமும் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் துறையினருக்கும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்’’ என்று அந்தத் தீர்ப்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருக்கிறது. அதை மின்சார வாரியம் செயல்படுத்த வேண்டும்.

300 மெகாவாட் முதல் 500 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று  தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்  தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அவமதிப்பு வழக்கும், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும்  தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 hours round the clock assistance should be provided to agriculture by Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->