இலங்கை அகதிகள் 4 பேர் தமிழகம் வருகை.!
4 Srilankan refugees comes to tamilnadu
இலங்கையில் இருந்து 4 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.
அதன் காரணமாக இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 200-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வவுனியா தவசி குளம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார், அவரது மனைவி மேரி மற்றும் இவர்களது குழந்தைகள் கிருத்திகா, கிருஸ்மிதா ஆகிய 4 பேரும் நேற்று இரவு 10 மணி அளவில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில் கடற்கரை பகுதியில் இவர்களை இறக்கிவிட்ட படகு மீண்டும் இலங்கை திரும்பி சென்று விட்டது. இதில் இவர்கள் நான்கு பேரும் விடியும் வரை கோதண்டராமர் கோயில் பகுதியிலேயே காத்திருந்தனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை தகவலறிந்து விரைந்து சென்ற ராமேஸ்வரம் கடற்கரை போலீசார் 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டதால் பணம் கொடுத்து இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்ததாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் விசாரணைக்கே பிறகு நான்கு பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
4 Srilankan refugees comes to tamilnadu