பழிவாங்க நினைக்குறாங்களே... முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் மனு!
ADMK Ex Minister MR Vijaya Baskar Bail case file again
கரூர் : நிலமோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது, கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முன்ஜாமீன் கோரி சேய் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் பிரகாஷ் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, அவரின் மக்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்தில் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்தார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட நிலமோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது.
இதற்கிடையே, பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று கரூர், வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனையும் நடைபெற்றது.
மேலும், விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் போலீசாரால் கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், நில மோசடி வழக்கில் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு முன்ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
ADMK Ex Minister MR Vijaya Baskar Bail case file again