இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! முக்கிய புள்ளியை தூக்க கோரும் எடப்பாடி பழனிச்சாமி! அடுக்கடுக்கான அதிர்ச்சி புகார்கள்! - Seithipunal
Seithipunal


தடையில்லா கள்ளச் சாராய விற்பனைக்கு துணை போகும் விடியா திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி விலக வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்... கங்கையே சூதகமானால் என்ன செய்வது? என்பதற்கு ஏற்றார்போல், தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. 

மக்கள் தங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அரசிடமோ, ஆட்சியாளர்களிடமோ முறையிடுவார்கள். ஆனால், அரசே நடத்தும் நிறுவனத்தில் தவறுகள் நடந்தால் யாரிடம் முறையிடுவது? கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விடியா ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்படும் கடைகள் மற்றும் பார்களில் நடக்கும் அவலங்கள் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி வாக்களித்த தமிழக மக்களை எல்லா வகைகளிலும் வஞ்சிக்கலாம் என்று, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி மற்றும் சொத்து வரி உயர்வு, பால்விலை உயர்வு, மறைமுக பேருந்து கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல்வேறு வரி மற்றும் கட்டணச் சுமைகளை, வாக்களித்த மக்கள் மீது நேரடியாக சுமத்தி உள்ளது விடியா திமுக அரசு.

கடந்த மே மாதம், தஞ்சாவூரில் சட்ட விரோத பார் ஒன்றில் தனித் தனியாக வேவ்வேறு நேரங்களில் மது அருந்திய எஸ். குப்புசாமி (68) மற்றும் டி. விவேக் (36) ஆகிய இரு மீன் வியாபாரிகள் அரசு மருத்துவமனைகளில் மரணமடைந்துள்ளனர். அவர்கள் சயனைட் அருந்தியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

ஒருவர் சயனைட் உட்கொண்டவுடன் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இருவரது உடற்கூறாய்வை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடத்த நான் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அரசு கேளா காதினராய் இருந்தது.

மேற்கண்ட இரண்டு மரணங்களும் சட்ட விரோத பார்களினால் ஏற்பட்ட நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் இறந்துள்ளார். இவருடன் மது அருந்திய 16 வயது சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் துறை, இறந்தவரின் உடலை உடற்கூறாய்வு செய்து பரிசோதிப்பதற்கு முன்னரே, அவர்கள் பெயிண்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தண்ணீருக்கு பதில் கலந்து குடித்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரிப்பதாகக் கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. 

எப்போதிருந்து காவல் துறை அதிகாரிகள் மருத்துவத்தில் வல்லுனர்களாகத் திகழ்ந்து, ஆளும் அரசுக்கு சாதகமான பதிலை பத்திரிக்கை செய்திகளாக தருகின்றனர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. எனவே, இந்த நேர்விலாவது அரசு, இறப்பு ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளியிட வலியுறுத்துகிறேன்.

தமிழ் நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்த செய்திகளை வெளியிடாத ஊடகங்களே இல்லை. சட்ட விரோத பார்; அதில் விற்கப்படும் சில்லறை மதுவில் முறைகேடுகள் என்று கொள்ளை அடிக்கும் ஒரு போலி திராவிட மாடல் கும்பலை 75 ஆண்டுகால சுதந்திர இந்தியா கண்டதில்லை.

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த சோதனை நடவடிக்கைகள் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரு சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுதல்; அப்பாவி மக்களின் நிலத்தை பறிப்பது; அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி விஞ்ஞான முறையில் கோடிகளை சுருட்டுதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 

கள்ளச் சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணம் சில லட்சங்களை வீசி அவர்களது வாயை அடைத்துவிடலாம் என்ற மனப்பான்மையை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுடைய செயல்பாடுகள் மூலம் உணர முடிகிறது.

தவறு செய்யக்கூடிய கட்சிக்காரர்களையோ, அமைச்சர்களையோ தட்டிக் கேட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற பொம்மை முதலமைச்சராக திரு. ஸ்டாலின் இருப்பது வெட்கக்கேடானது.

கடந்த ‘மே’ மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச் சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய திமுக நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழகக் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி திமுக நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-ஆவது வார்டு உறுப்பினர் திருமதி லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-ஆவது வார்டு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்கராயன்பேட்டை கிளையின் திமுக செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி திமுக நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவாளர்களாக இருப்பதால், கடந்த இரண்டு வருடங்களாக விடியா அரசின் காவல் துறை இவர்களது நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கைது செய்யாமல் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி வந்துள்ளது, மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறு இழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சப்பைக் கட்டு கட்டும் வகையில் வசனம் பேசிக்கொண்டிருந்தால், அல்லலுறும் தமிழக மக்கள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

“ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்பிய மக்களுக்கு ஓரளவாவது நன்மை செய்பவன் நல்ல அரசியல்வாதி சுயநலத்துக்காக மக்களை படுகுழியில் தள்ளுபவன் நாசகார அரசியல்வாதி”

என்று மேலைநாட்டு அறிஞர் ஒருவர் கூறினார். அவரது சொல்லை மெய்ப்பிக்கும் வகையில் இந்த விடியா ஆட்சியாளர்கள் நாள்தோறும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருந்த திமுக, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல், ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தை பின்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது கண்டு தமிழக மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

சட்ட விரோத மது பார்கள் மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும், சட்ட விரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை காவல் துறை ஆய்வு செய்து உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வணிக வரித்துறை அதிகாரிகள் எப்படி தனியார் வணிக நிறுவனங்களை அடிக்கடி ஆய்வு செய்கிறார்களோ, அதுபோல் டாஸ்மாக் கடைகளிலும் கலால் முத்திரை உள்ள மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும் என்றும்; தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசை எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK GS Edappadi Palanisami Condemn to Senji Masthan DMK MKStalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->