தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள் என்றும், இன்று தமிழகத்தில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கடந்த 2006-2011 திமுக ஆட்சியில், 2008ம் ஆண்டு முதலே குறைந்த மின் அழுத்தம், மின் வெட்டு, மின் பற்றாக்குறை என ஆரம்பித்து மின்சார விடுமுறை என்ற அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டதையும், தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டினையும் பார்க்கும்போது "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்ற பாடல் வரிகள்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.
திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழகத்தில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் துன்புறுத்தல், கள்ளச்சாராய கலாச்சாரம், போதைப் பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல பிரச்சனைகளால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
ஓரிரு வாரங்களுக்கு முன்பு, வட சென்னைக்குட்பட்ட புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், சிட்கோ நகர், கொரட்டூர், ஒரகடம் பகுதிகளிலும், தென் சென்னைக்குட்பட்ட பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, திருநீர்மலை, லட்சுமிபுரம், சரஸ்வதிபுரம், ரங்கா நகர், அஸ்தினாபுரம், வேளச்சேரி, கிண்டி, தரமணி, சைதாப்பேட்டை, தி.நகர், அடையாறு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, பெரும்பாக்கம், வளசரவாக்கம் என சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தவித்தனர்.
இந்த மின்வெட்டு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சனை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவிட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக தவிக்கின்றனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.
சென்னையில் இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை வேறு மாறாக இருக்கிறது. பிற மாவட்டங்களைப் பொறுத்த வரையில், நகர்ப்புறங்களில் பகலிலும், கிராமப்புறங்களில் இரவிலும் குறை மின்னழுத்தம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் ஒரு phase இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ஊழியர்கள் பற்றாக்குறை, மின்சாதனப் பொருட்கள் பற்றாக்குறை, மின் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுவிட்டது, வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லும் திமுக அரசு, மின்சார வாரியத்தில் நிலவும் பற்றாக்குறையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கெல்லாம் காரணம் திறமையான அரசாங்கம் இல்லாததுதான் என்று மக்கள் நினைக்கிறார்கள். திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பொதுமக்கள் மனதில் ஆழ்ந்த கவலை குடி கொண்டுள்ளது. இனி தமிழகத்தில் ஒளி பிறக்காதா? வளமான எதிர்காலம் உருவாகாதா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் நிலவுகின்ற நிலைமையைப் பார்க்கும்போது, எதையும் சமாளிக்க முடியாமல் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது, திமுக அரசு திணறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.
புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பொற்காலமாக இருந்த தமிழகம் விரைவில் கற்காலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன்.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.