அமைச்சர் பொன்முடி பேச்சு - அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!
admk protest against minister ponmudi speech
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடியின் பேச்சு தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பொன்முடியின் பேச்சை கண்டித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.எஸ்.செங்கோட்டையன் எம்.எல். ஏ தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேசியதாவது:- "இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
அமைச்சரின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டுள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற ஒரு அமைச்சர் இப்படி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க போராட்டம் முன்னெடுத்துள்ளது. இது போன்றவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பயணம் என்று சொன்னார். மக்கள் வரி பணத்தில் கொண்டு வந்த திட்டத்தை ஓசி என்று சொல்கிறார், அப்படி கொச்சைப்படுத்தி பேச அவருக்கு தகுதி இல்லை. அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர். அமைச்சர் பொன்முடி பேச்சால் தி.மு.க அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அ.தி.மு.க 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க. செல்லும் பாதை சரியானதாக இல்லை. கொடிவேரி சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கோபியில் புறவழிச்சாலை அமைக்கப்படும், கோபி முதல் தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை திட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்படும்.
வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முனைப்போடு இருந்து வருகிறோம். இதோடு அமைச்சர் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைப்போம். அதற்கு தொண்டானாக இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
admk protest against minister ponmudi speech