என்எல்சி நடத்திய சுரங்க இயந்திரங்கள் தொழிற்பயிற்சி தேர்வில் குளறுபடி.!! வெளியான பரபரப்பு அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


என்எல்சி  நடத்திய சுரங்க இயந்திரங்கள் தொழிற்பயிற்சி தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக அதிமுக எம் எல்ஏ அருண்மொழித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சுரங்க இயந்திரங்கள் தொழிற் பயிற்சிக்காக எழுத்துத்தேர்வு நேற்று 17.12.2023ல் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்று என்எல்சியால் அறிவிக்கப்பட்டு திட்டமிட்டப்படி நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்கள் என என்எல்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 683 பேர் தேர்வு எழுத அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு வினாத்தாள்களும் வழங்கப்பட்டது. அந்த வினாத்தாள்கள் படிக்க முடியாத அளவிற்கு தமிழ்மொழியாக்கம் மிக மிக மோசமான நிலையில் இருந்த காரணத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, என்எல்சி நிறுவனம் மேற்படி காரணத்தை ஒப்புக்கொண்டு வினாத்தாள் தயாரித்தல் முதல் தேர்வு முடிவுகளை ஒப்படைத்தல் வரை உள்ள பொறுப்புகளை ஒப்படைக்கப்பட்ட வெளி நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தி தேதி குறிப்பிடாமல் தேர்வை ஒத்தி வைத்தது.
என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு போட்டி தேர்வுகளில் கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் என்எல்சிக்கு நிலம், வீடுகளை கொடுத்த குடும்பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த குளறுபடியால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


சுரங்க இயந்திரங்கள் தொழிற்பயிற்சியில் 1000த்திற்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு எண். 2/2023-ல் வெறும் 238 இடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளி வந்தது. ஏற்கனவே என்எல்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட பொறியியல் பட்டதாரி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட தேர்ந்தெடுத்தப்படாமல் இருந்த நிலையை சுட்டிக்காட்டி, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் என்எல்சி நிறுவனம் சுரங்க இயந்தரங்கள் தொழிற்பயிற்சிக்கான தேர்வில் மிகப்பெரிய தவறை செய்து விட்டு, தேர்வு பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட வெளி நிறுவனம் மீது குற்றம் சுமத்தி, மிக சாதாரணமாக மேற்படி தேர்வை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்துள்ளது என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்த குடும்பத்தினர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் மீது என்எல்சி நிறுவனம் கொண்டுள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே தொடர்ந்து வீடு, நிலம் கொடுத்த குடும்பத்தினர்கள் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள் ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்த தொழிலாளர்களாகவே ஓய்வுபெறுகின்ற நிலையில், அவர்களின் கோரிக்கைகளான உரிய இழப்பீடு, வாழ்வாதாரம், மாற்று குடியிருப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் நில எடுப்பு பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல், ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கின் முடிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மனிதாபமானமின்றி என்எல்சி நிறுவனம் விவசாயிகளை பல்வேறு விதங்களில் தொடர்ந்து பழிவாங்கி வருகிறது.


கடந்த 10 ஆண்டுகளாக நில எடுப்பு நடைபெறாத காரணத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என என்எல்சி நிறுவனம் முன்னனி செய்தி தாள்களில் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறது. இதன் மூலம் அ.இ.அண்ணா.தி.மு.க ஆட்சி, விவசாயிகளுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருந்தது என்பது தெளிவாகிறது. எதிர் கட்சியாக இருந்த போது விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், நீலிகண்ணீர் வடித்ததை மறந்து விட்டு, தற்பொழுது ஆளுகட்சியானவுடன் திமுக என்எல்சிக்கு ஆதரவாக நில எடுப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து வருவது கண்டனத்திற்குரியது.
மத்திய, மாநில அரசுகள் நிலம், வீடு கொடுத்த விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் அதிகாரத்தை பயன்படுத்தி, அடக்கு முறையை கையாண்டு, சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளின் ஒற்றுமையை குலைத்து ஆதாயம் அடைந்து வருவதை எந்நாளும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
எனவே ஒரு போட்டித்தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த இயலாத என்எல்சி நிறுவனம், ஒத்தி வைத்துள்ள தேர்வை ரத்து செய்து விட்டு, தாமதப்படுத்தாமல், என்எல்சிக்கு நிலம், வீடுக்கொடுத்த குடும்பத்தினருக்கு முன்னுரிமைக்கொடுத்து உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதோடு நிலஎடுப்பு பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்தாமல் நிலம் கொடுத்தவர்களுடைய கோரிக்கைகளை, உரிமைகளை மத்திய மாநில அரசுகள் உரிய பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk mla alligaes mess in mining machinery vocational training exam conducted by NLC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->