வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.!
air low pressure formed in bay of bengal
தமிழகத்தில் நாளுக்கு நாள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனால், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் 26-ந்தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட இலங்கை-டெல்டா மாவட்டங்களுக்கு இடையே நகரக்கூடும்.
அங்கு 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஒரே இடத்தில் நிலவக்கூடும். அது தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால், தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும் 25-ந்தேதி மாலையில் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி, 26, 27 மற்றும் 28 -ந் தேதிகளில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
air low pressure formed in bay of bengal