2025-ல் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல்: வங்கி அதிகாரிகள் விளக்கம்
All Saturdays will be bank holidays in 2025 Misinformation Explanation of Bank Officials
சென்னை: சமூக வலைதளங்களில் பரவி வரும் 2025-ம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கூறப்படும் செய்தி பற்றி, வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு பொது விடுமுறை தினங்கள் தவிர, மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் முழு நாள் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளின் விளக்கத்தில், “2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகள் தொடர்பான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவுகளுக்கான விடுமுறை விவரங்கள் உள்ளன. அதில், பொதுவிடுமுறை மட்டும் வங்கிகளுக்கு பொருந்தும், ஆனால் அரசு விடுமுறை தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கு மட்டும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுவது என்பது அரசாணையில் உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். எனவே, அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல். சனிக்கிழமை விடுமுறையை மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும்," என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், சமூக வலைதளங்களில் பரவும் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் தகவல் உண்மையற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
All Saturdays will be bank holidays in 2025 Misinformation Explanation of Bank Officials