பள்ளி மாணவன் மீது சாதிய கொலை வெறித்தாக்குதல்; வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்..!
Tamil Nadu SC ST Commission takes up case of homicidal attack on school student
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் வெட்டப்பட்ட சம்பவம் நெல்லை-தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், குறித்த மாணவர் மீது சாதிய கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தமிழ்நாடு எஸ்.சி. எஸ்.டி ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
தேவேந்திர ராஜ் என்ற அரிவாள் வெட்டுப்பட்டுள்ள மாணவன் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தற்போது பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக நேற்று காலையில் தேவேந்திர ராஜ் தனியார் டவுன் பஸ்சில் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது, அரியநாயகிபுரத்தைக் கடந்து பஸ் கெட்டியம்மாள்புரம் நிறுத்தம் பகுதியில் சென்றபோது ஒரு கும்பல் திடீரென்று பஸ்சை வழிமறித்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சுக்குள் ஏறி சென்று தேவேந்திரராஜை பிடித்து வெளியே இழுத்து வந்து, தேவேந்திரராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இவ்வாறு கொடூர தாக்குதல் ஈடுப்பட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஊட்டினார். தலை மற்றும் கைகளில் விரல்கள் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (19) மற்றும் 02 சிறுவர்களை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதோடு, குறித்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 02-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu SC ST Commission takes up case of homicidal attack on school student