நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை வைக்க அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.!
Ambedkar photo not allowed in court
நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்களின் உருவப்படங்களை வைக்கக் கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற பதிவுதுறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படங்களை நீதிமன்றங்களில் வைக்க பலமுறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.
அரசியல் தலைவர்களின் உருவ சிலைகள் அல்லது படங்கள் வைக்கப்பட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்க கூடாது என உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலந்தூர் நீதிமன்ற நுழைவாயிலில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்ற உத்தரவிட்டது.
நீதிமன்ற வளாகங்களில் அரசியல் தலைவர்களின் படங்களை வைக்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்திய நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. அதன்படி வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்கு பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்களின் படங்களை வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Ambedkar photo not allowed in court