ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பங்குனி பெருவிழா.. சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்!
Andipatti Kaliamman Temple Panguni Festival Goddess appeared before the devotees on the lion vahana
ஆண்டிபட்டியில் காளியம்மன் கோவிலில் நடைபெற்ற பங்குனி பெருவிழாவில் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேள வாத்தியம் முழங்க விடிய விடிய நடைபெற்ற வீதி உலாவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் தாய் கோவிலான காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி அம்மன் சிங்க வாகனத்தில் வீதி ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலத்தில் விடிய விடிய வீதிகளில் காத்திருந்து பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு காளியம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று பெண்கள் முளைப்பாரி,பால்குடம் ,காவடி, தீச்சட்டி எடுத்து தங்கள் வழிபாடுகளை செலுத்தினர்.
தொடர்ந்து வைகை அணையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் மூலவர்களுக்கு அர்ச்சனை அபிஷேகங்கள் செய்யப்பட்டு
நேற்று இரவு சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆண்டிபட்டி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.அப்போது ஒவ்வொரு வீடுகள் கடைகளுக்கு முன்பாகவும் பொதுமக்கள் ஆள் உயர மாலையை அம்மனுக்கு அணிவித்தும், தேங்காய் பழம் ,அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். வீதி உலா, மேள வாத்தியம் முழங்க விடிய விடிய நடைபெற்று ,இன்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது .
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் காந்திமதிநாதன் தலைமையில் ,விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்
English Summary
Andipatti Kaliamman Temple Panguni Festival Goddess appeared before the devotees on the lion vahana