தீபாவளிக்கு பட்டாசுக் கடை அமைக்க வேண்டுமா? - உடனே அப்ளை பண்ணுங்க.!
apply for deepavali firecrackers shop in madurai
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசு வெடித்து பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ”பட்டாசுக்கடை அமைப்பதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம், கடை அமையவுள்ள இடத்தின் வரைபடம் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். மேலும், குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு நகல், மாநகராட்சி ரசீது, சம்மந்தப்பட்ட கட்டிடத்திற்கான அலுவலர் மறுப்பின்மை கடிதம் என்று அனைத்து ஆவணங்களும் இணைக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.900 செலுத்தி, விண்ணப்பத்தை செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 1 மணிக்குள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப் பின் காவல்துறை திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். சாலையோர கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
apply for deepavali firecrackers shop in madurai