ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறிங்களா?...தூங்கும் வசதியுடன் இன்று சிறப்பு ரயில் இயக்கம்!
Are you going to town for ayudha pooja special train operation today with sleeping facility
சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆயுதபூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சிறப்பு ரெயிலானது (வ.எண்.06193) இன்று (வியாழக்கிழமை) மற்றும் வரும் 12-ம் தேதி நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை 7.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும், காலை 7.58 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையமும், காலை 8.23 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையமும் சென்று, மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06194) கன்னியாகுமரியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.48 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையமும், மாலை 6 மணிக்கு திருமங்கலமும், மாலை 6.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும் வந்தடைந்து, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும், இதில், 10 இரண்டாம் தூங்கும் வசதி பெட்டிகளும், 6 பொதுப்பெட்டிகளும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
Are you going to town for ayudha pooja special train operation today with sleeping facility