ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினர் தொடர்பை மறைக்க என்கவுண்டர் - அண்ணாமலை பரபரப்பு டிவிட்!
Armstrong BJP BSP Annamalai thiruvengadam encounter
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பி இருப்பதாகவும், கொலை வழக்கு தொடர்பான உண்மையை மறைக்க திமுக முயற்சி செய்வதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், திருவேங்கடம் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் அண்ணாமலை எழுப்பி உள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களும் இந்த என்கவுண்டர் சம்பவத்தின் பின்னணி குறித்து சந்தேகநகலி எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மற்ற வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீமான் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Armstrong BJP BSP Annamalai thiruvengadam encounter