பொங்கலுக்கு பீர் குடிக்கும் போட்டி - வைரலாகும் விளம்பர பேனர்.!
beer drink competition in pongal festival
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் மூன்றாவது நாளான காணும் பொங்கல் அன்று கபடி, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு ஓட்டம், மியூசிக்கல் சேர், கிரிக்கெட், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும்.
அத்துடன் ஆடல், பாடல் என்று அமர்க்களப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு சிறப்பு பரிசுகளையும், பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளையும் வழங்குவார்கள். பல இடங்களில் புது விதமான போட்டிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு பகுதியில் இளைஞர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி காணும் பொங்கல் நாளில் பீர் குடிக்கும் போட்டி நடத்தப்படுவதாக பேனர் வைத்துள்ளனர்.
அதில், 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024, ஒன்பதரை பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024, ஒன்பது பீர் குடித்தால் மூன்றாம் பரிசு ரூ.3,024 மற்றும் எட்டு பீர் குடித்தால் நான்காம் பரிசு ரூ.2,024 என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போட்டியின் போது வாந்தி எடுத்தால் அல்லது துப்பினால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். அத்துடன், அவர்கள் குடித்த பீருக்கான பணத்தையும் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
‘மது குடித்தல் உயிருக்கு தீங்கு விளைவிக்கும்’, ‘மது நாட்டுக்கு, உயிருக்கு, உடல்நலத்திற்கு தீங்கானது’ என்று தெரிந்தும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
beer drink competition in pongal festival