கோயம்புத்தூரில் அதிர்ச்சி - கள்ளக்காதலில் பிறந்த ஆண் குழந்தை விற்பனை.!
boy baby sales in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. இந்தக் குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகி விட்டதாகவும், அதனைக் கண்டுபிடித்து தருமாறும் போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தை கடத்தப்படவில்லை என்பதும், குழந்தையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததும், இந்த சம்பவத்தில் அனிதாவின் கள்ளக்காதலன் மோகன்ராஜுக்கு தொடர்பு இருப்பதும், அனிதாவுக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடைபெற்று இருந்ததும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த குழந்தை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் கன்னியாகுமரிக்கு சென்று குழந்தையை மீட்டு கோவைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக அவருடைய தாய் அனிதா, கள்ளக்காதலனான பெரம்பலூர் கீழ்பிள்ளையனூர் பகுதியைச் சேர்ந்த பி.மோகன்ராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த எம்.ரஞ்சிதா என்ற ஆர்த்தி சிங்காநல்லூரைச் சேர்ந்த பி.சுஜாதா, எம்.புகழம்மாள், சேலம் தாசம்பட்டி பகுதியை சேர்ந்த லில்லி, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருமாபுரத்தை சேர்ந்த பி.ஷோபா ஆகிய ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கள்ளக்காதலில் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய அனிதாவும், மோகன்ராஜூம் குழந்தையை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அப்போது அனிதாவுக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் தகராறு ஏற்பட்டதனால் ஆத்திரமடைந்த அனிதா தனது குழந்தை கடத்தப்பட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரும்படியும் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
boy baby sales in coimbatore