தாயின் கையை உதறிவிட்டு ஓடிய சிறுவன்... அடுத்த நொடியே நேர்ந்த சோகம்...!
Boy killed after being hit by a car in erode
ஈரோடு மாவட்டத்தில் தாயின் கையை உதறிவிட்டு ஓடிய சிறுவன் காரில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கதிரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் அரீஷ்(7) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கார்த்தியின் தம்பி மகன் சரவணன் என்ற சிறுவன் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று விஜயலட்சுமிக்கு கையில் காயம் ஏற்பட்டதால் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது இவர்களது இரண்டு மகன் மற்றும் சரவணன் ஆகிய மூன்று சிறுவர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து இவர்கள் அனைவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, விஜயலட்சுமி கையைப் பிடித்து வந்த அரீஷ் திடீரென தாயின் கையை உதறிவிட்டு வேகமாக ஓடி சாலையை கடந்துள்ளான். அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென சிறுவன் மீது மோதியது. இதையடுத்து விஜயலட்சுமி அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Boy killed after being hit by a car in erode