காதல் திருமணம் செய்த தம்பி ஆணவக்கொலை...அண்ணனுக்கு மரண தண்டனை..கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Brother's love affair Death penalty for brother. Coimbatore court verdict
காதல் திருமணம் செய்த தம்பியை ஆணவக்கொலை செய்த அண்ணனுக்கு மரண தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளியாக பணி செய்துவந்த கனகராஜ் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இந்தநிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு , சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இது குறித்து தகவலறிந்து ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை அரிவாளால் வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இந்த ஆணவ படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
மேலும் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இன்று திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபனம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
English Summary
Brother's love affair Death penalty for brother. Coimbatore court verdict