சேலம் : உயிருக்கு போராடிய மின் ஊழியர் - துணிந்து இறங்கிய பேருந்து ஓட்டுநர்.!
bus driver saved electrical worker live in salem
சேலம் : உயிருக்கு போராடிய மின் ஊழியர் - துணிந்து இறங்கிய பேருந்து ஓட்டுநர்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சாலையில் நேற்று மின் மாற்றி ஒன்றில் பழுதுபார்க்கும் பணியில் ஊழியர் சரவணன் என்பவர் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் மின்மாற்றிக்கு வரும் மின்சாரத்தை துண்டித்துள்ளார். இருப்பினும் மின் இணைப்பு சரியாக துண்டிக்கப் படாததால் அவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில், ஊழியர் சரவணன் நிலை தடுமாறி தாங்கு கம்பியிலிருந்து, அதற்கு கீழே உள்ள கம்பியின் மீது விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து கத்திக் கூச்சலிட்டனர். அந்த நேரத்தில், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.
அப்போது, பொதுமக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததை பேருந்து ஓட்டுநர் பார்த்துள்ளார். உடனே அவர் பேருந்தை விட்டு கீழே இறங்கிச் சென்று பேருந்தில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து மின்மாற்றியின் மின் இணைப்பை துண்டிக்க முயன்றார். ஆனால் அந்த இரும்பு ராடு சரியாக உள்நுழையவில்லை.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் சுற்றும் முற்றும் பார்த்தபோது மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தில் இரும்பு கம்பி இருப்பதை பார்த்தார். உடனே, அவர் ஓடி சென்று அந்த கம்பியை எடுத்துவந்து மின் இணைப்பை நிறுத்தி மின்வாரிய ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்து ஓட்டுநரின் இந்தச் செயலை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
English Summary
bus driver saved electrical worker live in salem