முதல் மரியாதை வழங்குவதில் அதிமுக- திமுகவினரிடையே மோதல் - 6 பேர் கைது.!
case file on six peoples for admk and dmk supporters fight
முதல் மரியாதை வழங்குவதில் அதிமுக- திமுகவினரிடையே மோதல் - 6 பேர் கைது.!
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பத்திரகாளி அம்மன், பாரைகருப்பு அய்யனார் கோவிலில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.
அப்போது இந்த முதல் மரியாதையை பெறுவது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு கும்பல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டு மீது சரமாரியாக கற்களை வீசியும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் தீ வைத்தது. இதில் மோதலில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் மற்றும் சுப்பையா, சூர்யா, விஜய், வேல்விழி உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
உடனே அவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலில் வேல்முருகன் தரப்பை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தி.மு.க.வை சேர்ந்த கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜ்மோகன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பதினெட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
இருதரப்பிலும் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் நிலவிவரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவில் திருவிழாவில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
case file on six peoples for admk and dmk supporters fight