விஷச்சாராயம் விவகாரம் - கள்ளக்குறிச்சியில் களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்.!
cbi investigation in kallakurichi for poisonous liquor case
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19, 20-ந்தேதிகளில் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா உள்பட 9 போலீசார் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரைக் கைது செய்தனர். இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை குழு அமைக்கப்பட்டு விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
இந்த சூழலில் அதிமுக, பாஜக, பாமக சார்பில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனால், சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் 18 பேரின் குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்து விசாரணையை தொடங்கினர். சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கிய நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
cbi investigation in kallakurichi for poisonous liquor case