தமிழில் பெயர் பலகை இல்லையா? சென்னை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை!
Chennai Corporation Tamil Name Board shop
தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறையின் படி, தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் முதன்மையாக தமிழில் பெரிதாக காணப்பட வேண்டும். அதன் கீழ் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் குறைவான அளவில் இடம்பெற வேண்டும்.
பல இடங்களில் சரியாக இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பாமக இதனை கண்டித்து பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
இதேபோல் நாம் தமிழர் கட்சியும் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் தமிழ் எழுத்துக்கள் சிறியதாகவும், ஆங்கிலம் அல்லது இந்தி போன்ற மொழிகளில் பெயர் பலகைகள் பெரிதாக அமைக்கப்பட்டு காணப்படுகின்றன..
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் பாரிமுனை, சவுகார்பேட்டை போன்ற பகுதிகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், 7 நாட்களுக்குள் திருத்தம் செய்யாவிட்டால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், இதனை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகள் பற்றிய தகவல்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Corporation Tamil Name Board shop