பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் & செயலும் பாலியல் துன்புறுத்தல் தான் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Chennai HC Judgement Harassment case
பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல்களும் பாலியல் துன்புறுத்தல் என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அம்பத்தூரிலுள்ள தனியார் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் பாலியல் தொல்லை குறித்த புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த நிறுவனத்தின் விசாகா குழு, அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கக்கூடாது என பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை ஒருதலைப்பட்சமானது என்று அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாகா குழு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை கேட்காததாக நீதிமன்றம் கூறி, பரிந்துரையை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. புகாரளித்த பெண்கள், அந்த அதிகாரி தங்களது இருக்கை பின்னால் நிற்பதுடன், உடல் அளவுகளை கேட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
அதற்கு, “உயரதிகாரி என்ற முறையில் கண்காணிப்பதற்காக இருக்கை பின்னால் நின்றேன். பாலியல் தொல்லை செய்யும் நோக்கம் இல்லை,” என அதிகாரி தரப்பு வாதம் வைத்தார்.
இதை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “பணியிடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தலாகும்” என்று கூறி, விசாகா குழு பரிந்துரைகளை செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தார்.
English Summary
Chennai HC Judgement Harassment case