தீவுத்திடலில் திட்டமிட்டபடி பொருட்காட்சி நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.!
chennai highcourt order to trade fair in theevu thidal
பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.
இதுகுறித்து, அரசு தரப்பில் கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
அதன் படி, இந்த நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன் வேர்ல்டு நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையின் போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பொருட்காட்சிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வருகிற 28-ந்தேதி முதல் தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்கவுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் நீதிபதிகள், பொருட்காட்சியை திட்டமிட்டபடி வருகிற 28-ந்தேதி தொடங்குவதற்கு அனுமதியளித்து, மனுதாரர் நிறுவனத்திற்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிப்பதற்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
English Summary
chennai highcourt order to trade fair in theevu thidal