சென்னையில் உள்ள குப்பை மேடுகள் இனி காணாமல் போகும்! மேயர் பிரியா எடுத்த அதிரடி முடிவு!
ChennaiCorp Renovate Kodunkaiyur Garbage Dump with Bio Mining Method
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சீரமைக்கப்படும்!
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கை ரூபாய் 648 கோடி ரூபாய் பயோ மைனின் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு நாளுக்கு சுமார் 5000 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது.
இதில் பிரதானமாக கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கும் பெருங்குடி குப்பை கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. நீண்ட காலமாக கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளால் நிலத்தடி நீரில் ரசாயன தன்மையின் அளவு அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு கடுமையான மோசமான சூழல் உண்டாகியுள்ளது.
இந்த நிலையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் கையாளவும், குப்பை கிடங்கை மறு சீரமைப்பு செய்யவும், குப்பை கிடங்கின் நிலத்தை மீட்டெடுக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி வல்லுனர்களுடன் இணைந்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் ரூ.648 கோடி ரூபாய் செலவில் ஆறு தொகுப்புகளாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்கிடாக 160 கோடி ரூபாயும், மாநில அரசு நிதியாக 110 கோடி ரூபாயும், சென்னை மாநகராட்சியின் சார்பாக 378 கோடி ரூபாயும் என ஒட்டுமொத்தமாக 648 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் கொடுங்கையூரில் உள்ள 751 ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய 34 ஆயிரம் டன் எடையுள்ள குப்பைகள் பயோ மைனிங் செய்வதற்கு தமிழக அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தேங்கியுள்ள குப்பை மேடு முழுமையாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ChennaiCorp Renovate Kodunkaiyur Garbage Dump with Bio Mining Method