என்எல்சி விவகாரம்.. களமிறங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி.! 2 நாட்கள் கெடு விதித்து நீதிமன்றம் அதிரடி.!!
ChennaiHC to appoint retired judge to resolve NLC contract workers issue
என்.எல்.சிக்கும், ஒப்பந்த தொழிலாளருக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிப்பது குறித்து 2 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்எல்சி நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் என்எல்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தகுந்த இடத்தை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது போராட்டம் நடத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் தான் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருவதாகவும் என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவு படி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யாததால் அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி, இது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண என்எல்சி நிறுவனம் விரும்புகிறதா? அல்லது பிரச்சனையை பெரிதுப்படுத்த விரும்புகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஒத்தி வைத்தார்.
English Summary
ChennaiHC to appoint retired judge to resolve NLC contract workers issue